வலையுலக நட்புகளின் வாழ்த்துகளையும், ஆசிகளையும் வேண்டி ..!


சொன்னவுடன் தெரிந்து கொள்ளும் அளவுக்கு மதுக்கூர் பெரிய ஊரில்லை. தஞ்சை மாவட்டத்தின் சிற்றூர்களில் ஒன்று. அங்கே நகைத் தொழிலைத் தவிர வேறெதுவும் தெரியாத மிகச் சாதாரண குடும்பம்.

+2 முடித்து கோவையில் 3 மாதம் மெஷின் கட்டிங் டிரைனிங் பிறகு அங்கேயே 1500 ரூபாய் சம்பளத்தில் வேலை . காந்தி பார்க் - பொன்னையராஜபுரம் அருகில் ராசி பில்டிங் என்ற ஒரு மேன்ஷன் மாதம் 250 ரூபாய் வாடகையில் ஜாகை. நாஸ் தியேட்டர் அருகில் ஒரு மாடியில் நல்ல மெஸ் மாதம் 450 ரூபாய்க்கு மூணு வேளை சாப்பாடு போட்டார்கள் கிட்ட தட்ட இரண்டரை வருடம் கோவை வாசம்தான்.

அதன் பிறகு சொந்த ஊர்... கடுமையாக போராடி நகைக்கான கட்டிங் மெஷின் வாங்கி சொந்த கடை. ம்கூம் விளங்கவில்லை வேலை வாய்ப்பு இல்லை இருக்க இருக்க கடன்தான் அதிகரித்தது. மெஷினை ஊரிலேயே வைத்து விட்டு. சென்னை பட்டணம் விஜயம்.

அண்ணன் சின்ன வயதிலேயே சென்னையில் செட்டில். அவருடன் நகைக்கு கல்பதிக்கும் தொழில் பழகினேன். அண்ணன் புதிதாய் ஒரு தொழில் தொடங்க பலத்த நஷ்ட்டம். மீண்டும் கடன் போராட்டம். கடும் சோதனை.

ஊரில் இருக்கும் மெஷினை கொண்டுவந்தால் விற்று எதாவது ஒரு சிறிய கடனையாவது அடைக்கலாம் என்ற எண்ணத்தில் சென்னைக்கு மெஷினை கொண்டுவந்தாயிற்று. அதும் முடியவில்லை.அடிமாட்டு விலைக்கு கேட்க விற்க மனமில்லை.

அப்போது மிஷினை வீட்டிலேயே செட் செய்து சின்ன சின்ன வேலைகள் செய்து எளிய ஒரு வருமானம். அதன் பின்னர் மாத வாடகை 250 க்கு சிறிய கடை பிடித்து ஒரு பழைய சைக்கிளுடன் துவங்குகிறேன் என் பயணத்தை..1998 ல்.! மெல்ல மெல்ல பிக்கப் ஆனது . அதன் பிறகு வேலை வேலை வேலைதான்..! எதிர்பார்க்காத அளவுக்கு வேலை. காஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி வெறித்தனமாக இரவு பகல் என வேலை பார்த்தேன்.! துணைக்கு யாருமில்லை நானே தொழிலாளி ,நானே முதலாளி..!

என்னை பொறுத்தவரை அதிஷ்ட்டம் என்பது யாதெனில் முழுக்க முழுக்க உழைக்க வாய்ப்பு கிடைப்பதுதான்.! ஒரு மெஷின் இரண்டு மெஷின் ஆனது வேலைக்கு ஆள் வைத்து கொண்டேன். நிழல்களின் நாடகம் எல்லாம் நிஜங்களின் தரிசனம் ஆனது.! பெரிய கடை பிடித்தேன் மேலும் சில மிஷின்கள்
வாங்கினேன் .ஆட்களும் வைத்து கொண்டேன் ..!

அதன் பிறகு கல்யாணம் 2002ல். 2003 ல் முதல் பெண்குழந்தை நான்காண்டு இடைவெளியில் அடுத்த பெண் குழந்தை .லோ கிளாஸ் பொருளாதார நிலையில் இருந்து கடை வாடகை,வீட்டு வாடகை,ஆட்கள் சம்பளம்,வீட்டு செலவு என மிடில் கிளாஸ் சராசரியில் வந்து நிற்கிறேன்.பொருளாதார பாதையில் கடந்த 2,3 ஆண்டுகளாக பெரிய ஏற்றம் எதுமில்லாமல் சமவெளி பயணம்தான்.


தற்போது..!

எனக்கு ஆரம்ப காலம் முதலே ரத்தினக்கல் வியாபாரத்தில் அனுபவம் உண்டு. மேலும் துளியூண்டு ஜோதிட அறிவும் உண்டு. அந்த அனுபவ அடிப்படையில் என் கடையிலேயே என் சின்ன மகள் அட்ஷயநந்தினி பெயரில் அட்சயா ஜெம்ஸ்&ஜுவல்ஸ் என்று உயர்தர ரத்தினகற்கள்,முத்துமாலை,பவழமாலை முதற்கொண்ட அனைத்து வகை ரத்தின மாலைகள், மற்றும் உப ரத்தின கற்களின் விற்பனையை துவங்குகிறேன்.



மேலும் ஆர்டரின் பேரில் நகைகள் செய்து கொடுக்கவும் திட்டமிட்டுள்ளேன்.! எனது இந்த புதிய முயற்சி செழிக்கவும் வெற்றி அடையவும் தங்களின் மேலான வாழ்த்துகளையும் ,ஆசிகளையும் வழங்குங்கள் நண்பர்களே...!



....................................................

>