கன்னிப்பொங்கலும்,காளை பிடித்தலும்...!

பொங்கல் பதிவுகள் நெறய வந்து இருக்கு. எல்லாமே நம்ம அனுபவம் போலவே இருக்கு புதுசா ஏதும் எழுத தோணல ...! இருந்தாலும் எழுதாமலும் இருக்க முடியல. அதனால மாட்டுபொங்கல் மற்றும் கன்னி பொங்கல் பத்தி கொஞ்சம்.....!

மாட்டுப்பொங்கல்
வீட்டுல மாடு வைச்சு பெருசா ஏதும் மாட்டுபொங்கல் கொண்டாடுனது இல்ல..! ஆனா ...! அன்னிக்கு கண்டிப்பா கறி குழம்புதான்.

''மாட்டுப் பொங்கலுக்கு ஆட்டுக்கறி''
அதிகாலை அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து கறி கடைக்கு போகணும். அப்போவே கறி கடைல செம கூட்டம் இருக்கும். மதியம் ஆனா கண்டிப்பா தண்ணி அடிச்சுட்டு கலாட்டா பண்ணுறதுகுன்னே ஒரு க்ரூப் இருப்பாங்க எப்படியும் 2,3 பேர் மப்பு ஓவரா போய் சாய்ஞ்சு கிடப்பாங்க..!
கன்னிப்பொங்கல்

கன்னி பொங்கல்னா கூடவே செவ்வந்தி பூவும் நினைவுக்கு வரும். நண்டு சிண்டுல இருந்து வயசு புள்ளைங்க வரை செவ்வந்தி பூவுல சடை தைச்சுக்குவாங்க.! சந்தைல செவ்வந்திபூ குவிச்சு வைச்சு இருப்பாங்க. நான் கூட என் தங்கச்சிக்கு பூ வாங்கி வருவேன். அப்போ நூரு பூ அஞ்சு ரூபா ரேஞ்சுல இருக்கும். பூ வாங்குறதுல எப்படியும் ஒரு அம்பது காசு கட்டிங் உட்டுடுவேன் .


(அப்போ கட்டிங் உடுற பழக்கம் இப்போ வேற மாதிரி தொடருது) எல்லாரும் சடை தைச்சுகிட்டு ஏதாச்சும் பலகாரம் செய்ஞ்சு எடுத்துகிட்டு கூட்டமா போய் எங்கயாச்சும் வைச்சு சாப்பிடுவாங்க..!

இப்படி பொம்பள புள்ளைங்க கொண்டாடுறதால அதுக்கு பேர் கன்னி பொங்கல்னு நினைச்சுட்டு இருந்தேன் ஆனா காணும் பொங்கல் நு சொல்லி வேற விளக்கம் சொல்லுராங்க.
காளை பிடித்தல்

எங்க ஊருல ஜல்லி கட்டு எதும் நடக்காது ஆனா மாட்டு பொங்கல் கொண்டாடுனவங்க அந்த மாட்டு கழுத்துல நெட்டி மாலை, கரும்பு துண்டு, சுட்ட பனங்கிழங்கு,இன்னும் சிலர் ஒரு ரூவா,ரெண்டு ரூவா நாணயத்தகொம்புல கட்டி கன்னி பொங்கல் அன்னிக்கு காலைல அவுத்து விடுவாங்க. அந்த கரும்பு,பனங்கிழங்கு,காசு இதயெல்லாம் எடுக்கனும் இதான் எங்க வேலை. அதுக்குன்னு சில ஆயுதங்கள் எல்லாம் தயார் பண்ணி கொண்டு போவோம். கொஞ்சம் வாழை பழ தோல், நெறய முருங்கை கீரை இதான் எங்க ஆயுதம். என்னத்த பண்ணினாலும் முட்டவே முட்டாது அப்படி ங்குர ரேஞ்சுல சில மாடுக இருக்கும் அதைத்தான் தேர்வு செய்வோம்.

அந்த மாடுக முன்னாடி போய் வாழை பழ தோலை காட்டினா போதும் கன்னு குட்டி போல பக்கதுல ஓடி வரும் அதுங்க வாழை பழ தோலை சாப்பிடும் போது லாவகமா கழுத்துல உள்ளத எடுத்துடுவோம். சில மாடுகள் பக்கத்துல வராது வாழை பழ தோலுக்கு மயங்காத மாடுகள் கூட முருங்கை கீரைக்கு மயங்கிடும்.
கீரைய குடுத்து மெதுவா தடவி கொடுத்தா மாடு அப்டியே கெறங்கி போய்
நிக்கும் அப்போ மாடு கழத்துல உள்ள கரும்பு,பனங்கிழங்கு நெட்டி மாலை எல்லாத்தையும் உருவிடுவோம்.! இதான் நாங்க மாடு புடிச்ச வீர வரலாறு.!

ஒரு கேள்வி;- நல்ல படமா போடலாம்னு மாட்டுப்பொங்கல் ன்னு டைப் பண்ணி கூகுள் ல சர்ச் பண்ணினா நமீதா படமெல்லாம் வருதே ஏன்...?





..

>