பதிவுலக கலாச்சாரம்

நான் ஒரு கிராமத்தான் இன்னும் சொல்ல போனால் ஒரு பட்டிக்காட்டான்..! என்னை பொறுத்தவரை கணவன் மனைவி உறவு என்பது வலிமையானது பிரிக்க முடியாதது பிரிக்க கூடாதது...! நிறைய அடிதடி நிகழும் குடும்பத்தை எல்லாம் பார்த்து இருக்கிறேன். நல்ல விறகு கட்டை எடுத்து மனைவியை விளாசும் கணவன் மார்கள் உண்டு . இரண்டுநாள் மனைவி ஒருபுறம் கணவன் ஒருபுறம் முகத்தை வைத்துகொண்டு இருப்பார்கள் முன்றாம் நாள் சகஜம் ஆகிவிடுவார்கள். புருசன்தான் ஒன்னை இப்படி போட்டு அடிகிறானே அவன ஒதுக்கிட்டு உன் இஷ்டம்போல வேற யார் கூடயாவது வாழலாமே அப்படின்னு சொன்னா புருஷன் எந்த விறகு கட்டையால அடிச்சானோ அதே கட்டய எடுத்துகிட்டு யார பாத்து என்னடா சொன்னே அப்படின்னு சொன்ன ஆள அடிக்க வந்துடுவாங்க...!


ரொம்ப நாள் வம்பும் சண்டையுமா இருக்குறவங்களும் உண்டு அவங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு ஒரு முறையான ஒற்றுமைக்கு வந்துடுவாங்க ..!

வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள்

வெளிநாட்டில் கணவன் இருக்க உள்ளுரில் இருக்கும் மனைவியர் படும் அவஸ்த்தை கொஞ்ச நஞ்சமல்ல.அந்த காலத்தில் கல்யாணம் ஆன புதிதில் விட்டு செல்லும் கணவன் எழுதும் கடிதத்தை மட்டும் திரும்ப திரும்ப படித்துகொண்டு அந்த கடிதம் கூடவே குடும்பம் நடத்தும் மனைவியர் ஏராளம். கணவன் உடல்நலம் சரியில்லை என ஒரு கடிதம் எழுதிவிட்டால் போதும் கடிதத்தை படித்து கண்ணீர் விட்டு கோயில் குளம் என வேண்டுதல் செய்யும் மனைவியர் உண்டு .

இப்படி கிராமத்தில் கணவன் மனைவி உறவினை பார்த்து பழகிய என்னைபோன்றோர்க்கு பிடிக்கவில்லையெனில் ஜோடியை மாற்றிகொள்ளலாம் என்ற கலாச்சாரம் வேப்பங்காயாய்தான் இருக்கும் .


கணவனோ மனைவியோ பிடிக்கவில்லை என்றாலும் விதியே என ஆரம்பத்தில் வாழ்ந்தாலும் இப்படி பொறுத்து கொண்டு வாழ்ந்தவர்கள் இறுதியில் வெற்றி அடைந்து இருக்கிறார்கள் . எந்த காலகட்டத்திலும் அவர்கள் ஜோடியை மாற்றிக்கொள்ள நினைத்து இருக்க மாட்டார்கள் .


சரி இப்போது நிகழ்வது என்ன ..? கணவனோ மனைவியோ பிடிக்காமல் போய்விட்டால் அவரை ரத்து செய்துவிட்டு வேறு வாழ்க்கையை தேர்ந்து எடுக்கலாம் என வெளி நாட்டில் இருந்து ஒருவர் எழுதுகிறார் . இது சரியா..தவறா .. என விவாதம் .!

என் கிராமத்து வாழ்க்கை முறையைத்தான் உலகம் முழுவதும் பின்பற்றவேண்டும் என நான் எதிர்பார்க்க முடியுமா ...? அவர் இருப்பிடம் வாழ்க்கை முறை அவர் சொல்லுவதில் இருக்கும் நியாயம் இதைத்தான் ஆராய வேண்டும். அவர் சொல்லுவது தவறாய் பட்டால் அதை சரியாக விளக்க வேண்டும் .

அதே சமயம் பிடிக்கவில்லை எனில் பிரிந்து வாழ்வதுதான் சரி என அவரும் தீர்ப்பு சொல்ல முடியாது. எங்கள் ஊரில் பொறுமையாய் இருந்து பிரியாமல் சாதித்தவர்கள் அதிகம் . இப்படி நினைப்பவர்கள் எதிர்வாதம் செய்கிறார்கள் .



இந்த விவாதத்தில் எந்த தவறும் இல்லை ..! ஆனால்..! கலாச்சாரம் கலாச்சாரம் என கூவி கொள்கிறோம் பதிவுலகத்துக்கு என ஒரு கலாச்சாரம் உள்ளது அதாவது சொல்லவந்த கருத்தை மறந்துவிட்டு கருத்தை சொல்லிய நபர்மீதான தனிமனித தாக்குதல் செய்வது அநாகரீக வார்த்தைகளை பிரயோகம் செய்வது விவாதத்துக்கு உரிய கருத்தை தொலைத்துவிட்டு நீயா..? நானா என கோதாவில் இறங்கிவிடுவது அந்த வகையில் இரு தரப்புமே பதிவுலக கலாச்சாரத்தை மீறவில்லை...!







>