காந்திஜி ஏன் பட்டினி கிடந்து சாகவில்லை ..?

வரலாறுகளை படிக்கும்போது ஒரே மாதிரிதான் படிக்கின்றோம் ..! ஆனால் சில விசயங்களும் ஒரு சில தலைவர்களும் மட்டுமே மனதில் நிலைக்கிறார்கள்.எனக்கு ஆரம்பத்தில் என் சிறுவயதில் காந்தி ஒரு மஹாத்மாவாகத்தான் தெரிந்தார். ஆனால் ..? கடந்த கால வரலாறுகள் முழுமையாக தெரியவரும்போது காந்தியை மகாத்மாவாக, தேசபிதாவாக ஏற்று கொள்வதில் நிறைய தடைகள் உள்ளன ..!

காந்தியை பற்றிய விஷயங்கள் நம்மீது வலுக்கட்டாயமாக திணிக்க பட்டு உள்ளது.அவரை அளவுக்கு அதிகமாக உயர்த்தி வைத்து உள்ளது இந்திய அரசு. இந்திய அரசு என்றால் யார்..? சுதந்திரத்திற்கு பின்னர் பெரும்பான்மை காலங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தான் இந்திய அரசு ..! காந்தி ஒரு காங்கிரஸ் காரர் அதனால் அவரை உயர்த்தி வைத்து மக்களிடம் திணித்து இருக்கிறார்கள் இந்த காங்கிரஸ்காரர்கள் . காந்தியை போல அல்லது காந்தியைவிட அதிக அளவு தியாகம் செய்த, தேசத்திற்காக உயிர் நீத்த எத்தனையோ தலைவர்கள் உண்டு அவர்களுக்கு கொடுக்காத ஒரு முக்கியத்துவத்தை காந்திக்கு மட்டுமே கொடுத்து இருக்கிறார்கள்.

காந்தியை எனக்கு பிடிக்காமல் போனதற்கு பல காரணங்கள் உள்ளன .
அவர் ஒரு அஹிம்சாவாதியாய் இருந்தார் என்பதைவிட தன்னை ஒரு அஹிம்சாவாதியாய் காட்டிக்கொள்ளவே முனைந்து இருக்கிறார்.

அஹிம்சாவாதி வேடத்தில் சில விசயங்களில் சர்வதியாகவே செயல் பட்டு இருக்கிறார் ..!

கோட்சே

கோட்சேவை ஒரு கொடுமையான கொலைகாரன் என்று சித்தரிக்க படும்போது
அதே கோட்சேவை ஒரு நாயகனை போல ஒரு கூட்டம் கொண்டாடுகிறது அப்படி கோட்சேவின் பக்கம் என்ன நியாயம் இருக்கிறது ? காந்தியின் கொலை பற்றிய கோட்சேவின் வாக்கு மூலத்தை படிக்கும்போது கோட்சே மனதில் உயர்ந்து நிற்பதை தவிர்க்க முடியவில்லை..!

கோட்சே வாக்கு மூலத்தில் இருந்து ...!


///நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.


சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்து விட்டார் . ///

காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்து விட்டார்
இது காந்தியின் அதிஷ்டம் மட்டும் அல்ல நேதாஜியின் மறைவு ஒட்டு மொத்த இந்தியாவின் துரதிஷ்ட்டம்..!

அப்படி நேதாஜி திரும்பி இருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசாகி இருக்கும் .

இதோ.. காந்தி ...அஹிம்சை ... சமாதானம் .. என்றெல்லாம் சொல்லி கொண்டு
அறுபது வருங்களாக மாவு அரைத்து கொண்டு இருக்கிறது காங்கிரஸ்.
நம்மை போல் இருந்த சீனா எங்கேயோ போய்விட்டது ஆனால் நாம் ..?

தமிழ் நாட்டில் ஏழை மக்கள் உடை இல்லாமல் அரை ஆடை மட்டுமே அணிந்து இருந்ததை பார்த்த காந்தி என் மக்களுக்கு உடை இல்லை அதனால் நானும் அரை ஆடைதான் அணிவேன் என அரை ஆடை உடுத்தினாராம் ..!

நாம் எவ்வளவுதான் வறுமையில் இருந்தாலும் வெளியில் செல்லும்போது இருப்பதில் நல்ல உடையைத்தான் அணிந்து செல்வோம் அது ஒரு தன்மானம் , சுய கவுரவம் .

ஆனால்..? காந்தி அரை ஆடை உடுத்திய செய்கையால் உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் இந்தியர்கள் முழு உடை கூட அணிய வக்கில்லாத பஞ்ச பரதேசிகள் என்ற செய்தியை தான் பரப்பினார் . அதே சமயம் அவருக்கு உத்தமர் என்ற பெயர்.
ஒரு தேச தலைவனுக்கு இது அழகா ..? மக்கள் உடை உடுத்த வழியின்றி வறுமையில் இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் தானே ஒரு தலைவன் இருக்க வேண்டும் ஆனால் இவர் அதிலும் அனுதாபம் தேடிகொண்டார்.

சரி ..! மக்களுக்கு உடை இல்லை அதனால் தானும் அணியவில்லை இந்த காலத்திலேயே பட்டினி சாவுகள் நடந்து கொண்டுதான் உள்ளன ..! அவர் காலத்தில் இன்னும் எவ்வளவோ பட்டினி சாவுகள் நடைபெற்றன ..! என் மக்கள் பட்டினியால் சாகிறார்கள் அதனால் நானும் சாகிறேன் என்று காந்தி ஏன் பட்டினி கிடந்து சாகவில்லை ...???

>