தண்ணி,பொண்ணு

கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் சாலை .. அய்யம்பேட்டை அருகே மேல வழுதூர் . முக்கிய சாலையில் இருந்து வலது பக்கம் திரும்பி செல்லும் அந்த சிறிய சாலை காவிரி கரையில் முடியும். அந்த சாலையில் ஒரு டூ வீலர். வண்டியை ஓட்டி செல்பவன் கபிலன் பின் அமர்ந்திருப்பது அரசு. கபிலன் -அரசு இருவரும் உறவினர்கள் +நண்பர்கள் . கபிலனுக்கு திருமணம் ஆகிவிட்டது பெண் எடுத்தது கும்பகோணத்தில் . அரசுக்கு பெண் தேடி கொண்டு ....அரசுக்கு சென்னையில் வேலை. அரசுக்கு இரண்டு இடங்களில் பெண் பார்க்க... இரண்டு பெண்களையும் பிடிக்கவில்லை. ஒரு வீட்டிற்கு சென்று பெண்ணை பார்த்துவிட்டு பெண்ணை பிடிக்கவில்லை என சொல்லி வருவதில் அரசுக்கு துளியும் விருப்பம் இல்லை அதனால் இனிமேல் யார் வீட்டிற்கும் சென்று பெண் பார்ப்பது இல்லை என கண்டிப்பாக சொல்லிவிட்டான். அப்படி பார்ப்பது என்றால் எதாவது பொது இடத்தில் வைத்து பார்த்து கொள்ளலாம் என்பது அவன் முடிவு .


அதன் படி இப்போது அவன் செல்வது ஒரு காதணி விழாவிற்கு ..! கபிலனின் மனைவியின் அக்கா குழந்தைகளுக்கு கெடா வெட்டி காதுகுத்தும் நிகழ்ச்சி அவர்கள் குலதெய்வம் கோயிலில்..!அரசுவின் குடும்பத்திற்குஅழைப்பு ..!கபிலனின் மனைவியின் உறவு வழியில் ஒரு பெண் இருப்பதாகவும் அந்த பெண்ணை அரசுக்கு பார்க்க வேண்டி... ஜாதக பொருத்தம் எல்லாம் சரியாக இருக்க பெண்ணின் குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சிக்கு வர இருப்பதால் அந்த பெண்ணை இந்த இடத்தில் வைத்து பார்க்கலாம் என்ற முடிவில் சென்னையில் இருந்து அரசு வருகை..!

விழா நடக்கும் இடம் வரவே ...வண்டியை கபிலன் ஒரு அடர்ந்த புளிய மரத்தின்
நிழலில் நிறுத்த .! அந்த இடமே ஒரு களையுடன் காட்சி அளித்தது ..! புளிய மரத்தடியில் ஒரு கும்பல் ரம்மி ஆடிக்கொண்டு....! மரத்துக்கு அருகில் ஒரு மாட்டுவண்டி கிடந்தது. அது ஒரு டயர் வண்டி இப்போதெல்லாம் அச்சாணி யுடன் கூடிய சக்கரம் வைத்த மாட்டுவண்டிகளை பார்க்கமுடியவில்லை எல்லாம் டயர் வண்டிகள்தான். அருகில் ஒரு வைகோல்போர் இருந்தது அதன் பின் புறம் ஒரு மாட்டு கொட்டகை.

சாலையை ஒட்டி புளிய மரத்துக்கு அருகில் காவிரி ஆற்றுக்குள் பாதியாகவும் கரையில் பாதியாகவும் ஒரு அரசமரம் கம்பீரமாக ....! அங்கே குழந்தைகளும் ,பெண்களும் பெரியவர்களுமாக கலகலப்பாக மரத்து நிழலில்...! அந்த வழியே சென்ற ஒரு ஐஸ் வண்டிகாரர் கூட்டத்தை கண்டு அங்கேயே டேரா போட்டுவிட குழந்தைகள் சிலர் கையில் குச்சி ஐஸ்...!

பக்கத்திலேயே கோயில் இருந்தது ஒரு சிறிய கோயில்தான் இரண்டு பெரிய குதிரை சிலைகள் இருந்தன. ஒரு ஐம்பதுபேர் அமரும் அளவிற்கு ஷாமியானா
பந்தல் போடப்பட்டு அங்கே பெண்கள் எல்லாம்சுவராஸ்யமாக கதை பேசிக்கொண்டு .. கோயிலின் பின் புறத்தில் சமையல் வேலை மும்முரமாக
நடந்துகொண்டு இருந்தது ..!


கபிலனும் ,அரசுவும் புளிய மரத்தடியில் இருந்த மாட்டு வண்டியில் அமர,
ரம்மி ஆட்டத்தில் இடம் கிடைக்காத சிலர் தனியாக ஒரு ஆட்டம் போட எண்ணி ஆட்களை சேர்த்துக்கொண்டு இருந்தனர். ஒருவர் கபிலனை பார்த்து

மாப்ளே..!வாரியளா ஆட்டம் போடலாம் கை கொறையுது..!

இல்ல சித்தப்பு கொஞ்சம் வேலை இருக்கு..!

அது யாரு..! உங்க பிரண்டா அவுக ஆடுவாகளா ?

ஆடுவான் சித்தப்பு ஆனா இப்போ வேல இருக்கு ரெண்டு பேருக்கும்னு கபிலன் சொல்ல ..!

என்னடா அவர் உன்ன மாப்ளன்னு சொல்லுறாரு நீ சித்தப்புன்னு சொல்லுறே ? அரசு கேக்க ..!

அது அப்படித்தான் கண்டுகாத ..!

அப்போது ஒருவர் வந்து கபிலனின் கையில் ஒரு பிளாஸ்டிக் பையை கொண்டுவந்து கொடுத்து ரெண்டு இருக்கு பத்தாட்டி ஒரு போன் பண்ணுங்க அப்படின்னு சொல்லிட்டு போக ..!

பைக்குள் ரெண்டு குவாட்டர் பாட்டில்கள் ..!

அரசுக்கு அந்த சூழ்நிலை அப்படியே கவ்விக்கொண்டது

வெயில் மறைந்து சில்லென காற்று வீசியது மழை வரும்போல இருந்தது ..!

புளியமரம் ,ரம்மி ,குளிர்ந்த காற்று சமையல் செய்யும் இடத்திலிருந்து வந்த கறி
குழம்பு வாசனை என அரசு தான் பெண்பார்க்க வந்ததையே மறந்து போனான்.!

வார இறுதியில் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கும் பழக்கமும் உண்டு ..!
இப்போது இங்கே இந்த சூழ்நிலை குடிக்க துண்டியது ..! தயாராக கபிலன் கையில்
குவாட்டர் பாட்டில்கள் .

ரம்மி ஆடிய சிலர் பக்கத்தில் வைத்து சரக்கடித்து கொண்டும் இருந்தனர்..!

அரசு நீ தண்ணி அடிக்க வேணாம் பொண்ணு பார்த்துட்டு போகும்போது கும்பகோணத்துல பார்த்துக்கலாம் .. கபிலன் சொல்ல அரசு ஒன்றும் சொல்ல முடியாமல் தலையாட்டுகிறான் .

அரசு இப்படி யோசித்தான் ..! ஒருவேளை பொண்ண புடிக்கலைனா? தண்ணியும் அடிக்காம பொண்ணையும் புடிக்காம வேஸ்டா போய்டுமே ..? குடிபழக்கம் என்ற சைத்தான் அவனை இப்படி யோசிக்க வைத்தது ...!

கபிலா ஒரு விஷயம்..!

சொல்லு அரசு ..!

பொண்ண எப்போ பார்க்கலாம் ..!

சாப்பாட்டுக்கு பிறகு பார்க்கலாம்னு சொன்னாங்க அரசு..!

இல்ல ..பொண்ண முன்னாடியே பார்த்துட்டா நல்லா இருக்கும்னு பார்த்தேன் ஒருவேள பொண்ண புடிக்காட்டி ஜாலியா தண்ணி அடிச்சுட்டு ஒரு ரம்மி ஆட்டம்போட்டுட்டு போகலாம்னு பார்த்தேன்..!

கபிலனும் யோசித்தான் ..! இரு அரசு வரேன் ..! அப்படி சொல்லி ஷாமியானா பந்தல நோக்கி வேகமா போக ..!

கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்த கபிலன் வா அரசு அந்த அரச மரத்துகிட்ட போவோம் என் வொய்பும் உன் அக்காவும் பொண்ண கூட்டிகிட்டு வருவாங்க வா பார்கலாம்னு கூப்பிட ...! அரசுவும் கூட போகிறான் அரசு சார்பில் அரசுவின் அக்கா வும் அத்தானும் வந்து இருந்தனர் .

பொண்ணை புடிச்சுதுன்னா தண்ணி ஏதும் அடிக்காம ஜெண்டிலா நடந்துக்கலாம்
அரசு இப்படி நினைத்து கொண்டான்!

சற்று நேரத்தில் கபிலனின் மனைவியும் அரசுவின் அக்காவும் பெண்ணை அழைத்துவர மாநிறத்தில் சற்று உயரமாக எளிதில் கவரும் அழகுடன் வந்த அந்த பெண் லேசான கூச்சத்துடன் அரசுவை பார்த்து வணக்கம் சொல்ல ,இவனும் சிறிய வெட்கத்துடன் வணக்கம் சொல்ல ஒரு நொடியில் அவளிடம் வசப்பட்டு போனான். சிறிது நேரத்தில் வரேன்னு சொல்லி அப்பெண் சென்றுவிட பெண்ணை பிடித்து போய் விட்டது அரசுவிற்கு.

கபிலனிடம் பெண் புடிச்சுருக்குன்னு சொன்னதும் , அவனுக்கும் ஏக சந்தோசம் தெரியும் அரசு உனக்கு புடிக்கும்னு எனக்கு நல்லா தெரியும். சந்தோசமாக கூறிய
கபிலன் இரு வறேன்னுசொல்லி பிளாஸ்டிக் பையை எடுத்துக்கொண்டு போய்விட்டு கொஞ்ச நேரத்தில் திரும்பி வர ....இப்போது கபிலன் மேல் லேசான சரக்கு வாசனை.

குடிப்பழக்கம் என்ற சைத்தான் இன்னும் விடவில்லை அரசுவை..! ஒருவேள பொண்ணுக்கு நம்மள புடிக்காட்டி ? இப்படி யோசனை வர ...! பொண்ணுக்கு நம்மள புடிக்காட்டி தண்ணி அடிக்கலாமே ..!

அப்படியே கபிலனிடம் சொல்ல ...!

அட உன்னை போய் புடிக்காம இருக்குமா புடிக்கும் அரசு புடிக்கும் ..! இப்போது கபிலன் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு பேச ..!

இல்ல கபிலா தெரிஞ்சுகிட்டா நல்லது ..!

ஓகே இரு அரசு வரேன் ..!

நேராக அந்த பெண்ணை தனியே அழைத்து பேசுகிறான் கபிலன் !

இந்த பாரும்மா நான் உனக்கு அண்ணன் முறைதான்! நம்ம ஆளுங்கள பத்தி உனக்கு தெரியும் விருந்து விசேசம்னா தண்ணி அடிப்பாங்க சீட்டு ஆடுவாங்க அதே போல உன்னை பாக்க வந்த மாப்ளைக்கும் எப்போவாச்சும் கொஞ்சமா தண்ணி அடிக்கும் பழக்கம் உண்டு . பொண்ண எனக்கு புடிச்சா தண்ணி அடிக்கலன்னு சொன்னான் அதேபோல தண்ணி அடிக்கல! ஆனா இப்போ ஒரு சந்தேகம் ஒருவேள பொண்ணுக்கு என்னை புடிக்காட்டி என்ன பண்ணுறது அப்படின்னு உனக்கு புடிச்சு இருந்தா தண்ணி அடிக்க மாட்டான் என்ன சொல்லுறே உனக்கு புடிச்சு இருக்கா ?

எனக்கும் அவங்கள புடிச்சு இருக்குண்ணே ..! அந்த பெண் தலையை குனிந்து சொல்ல ..
கபிலனுக்கு உற்சாகம் சரிம்மா நான் வரேன் !

அண்ணே ஒரு நிமிஷம் ..!

என்னம்மா ..!

வேணும்னா அவங்கள கொஞ்சமா குடிச்சுக்க சொல்லுங்க .. !!!

கபிலனுக்கு சந்தோசம் தாங்கவில்லை ..!

அடடா மாதர் குல மாணிக்கமே ..! அரசு கொடுத்து வைச்சவன்னு சொல்லி அரசுவை நோக்கி ஓடுகிறான்..!

அரசுவிடம் விவரம் சொன்னவுடன் அவனுக்கும் சந்தோசம்

பொண்ண எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு கபிலா ..!

ஒரு ஜக்கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வைக்கோல் போர் அருகில் இருவரும் செல்ல சைடு டிஷ் ஏதும் இல்லயே கொஞ்சம் கறி எடுத்துகிட்டு வரேன்னு சொல்லி கபிலன் சென்றுவிட ..!

அரசுவிற்கு மன நிறைவு ,உற்சாகம் சந்தோசம் எல்லாம் ஒரு சேர தொற்றிக்கொள்ள ..!

கறியுடன் வந்த கபிலன் ஒரு பழைய சாக்கினை எடுத்து விரித்து அமர செய்கிறான்

இரண்டு சில்வர் டம்ளர்களில் சரக்கினை ஊற்றி தண்ணீர் கலந்து எடுத்துக்க அரசு ,அடி என சொல்ல

அரசு அமைதியாய் இருக்கிறான்..!

என்ன அரசு என்னாச்சு சாப்பிடு ..!

இல்ல கபிலா எனக்கு வேணாம் ..!

வேணாமா என்ன சொல்லுறே ..!

ஆமா..! கபிலா நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் எனக்கு சரக்கு வேணாம் ..! அந்த பொண்ணுக்கு என்னை புடிச்சுருக்குன்னு தெரிஞ்சதும் மனசு நெறஞ்சு போய்டுச்சி கபிலா..! அதுவே போதும் ...! எனக்கு இப்போ குடிக்க புடிக்கல ..!

ஒரு நிமிடம் அரசுவை உற்று நோக்கிய கபிலன் திடீர்னு ரொம்ப அழகா ஆயிட்டதுபோல போல இருக்கே அரசு ..!

சரக்கு வேணாமா சரி என்ன செய்யணும் உனக்கு சொல்லு ..!

நான் கொஞ்சம் தனியா இருக்கணும் கபிலா...! என்னை புரிஞ்சுகோ..!

உடனே கபிலன் அரசுவின் கையை பிடித்து காவிரி கரைக்கு அழைத்து சென்று படிகட்டுகளில் அமரவைக்கிறான் ..!

இங்கேயே இரு சாப்பிட போகும்போது அழைச்சுகிட்டு போறேன் ஏதும் வேணும்னா என்னை கூப்பிடு ..!

கொஞ்சமாக ஓடிய காவிரியை பார்த்தபடி கற்பனையில் மூழ்குகிறான் அரசு ..!!!












>