நான் ஹிந்து! நீ முஸ்லீம்! நாம் யார்?

நண்பர் புதுகை அப்துல்லா ஒரு பதிவு எழுதி இருக்கிறார்!
கிர்மினல்கள்
! கிர்மினல்களே! என்ற அந்த பதிவில் நேசமுடன் இஸ்லாம் என்ற பதிவரின் பதிவில் பெற்ற மகளை கற்பழித்த ஹிந்து தந்தை கைது. என்ற தலைப்பில் இடப்பட்டு இருந்த பதிவில் ''ஹிந்து தந்தை'' என்று மதத்தை குறிபிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், முஸ்லிம் தீவிர வாதிகள் என பொதுவில் கூறபடுவதால் மன வேதனையை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து தன்னுடைய சிறந்த பதிவுகளில் ஒன்றான தீபாவளி நினைவுகள் பதிவினை மறுபதிவும் செய்து இருக்கிறார்! இதன் மூலம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை என்ற ஒரு உயர்ந்த நோக்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

வெறுப்பை எளிதில் விதைத்து அதன் பலனை உடனடியாக நாமே அடைந்து விடலாம். ஆனால் அன்பை நாம் விதைத்தால் அதன் பலன் தெரிய அடுத்த பல தலைமுறைகள்கூட ஆகும். நீர்,நிலம்,காற்று என அனைத்தையும் வரும் சந்ததிகளுக்கு மாசுபடுத்திக் குடுத்து விட்டோம். அந்த வரிசையில் மதத்தைச் சேர்க்காமல் இருக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு இருப்பதை மறவோம்.
இந்த கருத்தில் மேலும் உயர்ந்து நிற்கிறார்


எங்கள் ஊர் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிகம் கலந்து வாழும் பகுதி! அங்கே எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உண்டு.சிறுவயதுமுதல் ஒரே குடும்பமாக பழகிய பல நட்புகளும் அங்கே உண்டு.தீபாவளி ,ரம்ஜான் எல்லாம் ஒன்றாக கொண்டாடி இருக்கிறோம். ரம்ஜான் பண்டிகையின் போது பண்டிகை காரர்கள் வீட்டில் இருக்கும் பட்சனங்களைவிட எங்கள் வீட்டில் அதிகம் இருக்கும்.எல்லா நண்பர்கள் வீட்டிலிருந்தும் பலகாரங்கள் வந்துவிடும். தீபாவளி சமயங்களில் அவர்கள் வீட்டிலும் அப்டித்தான்.




டேய்! போன தீபாவளிக்கு உங்க வீட்டுல செய்ஞ்ச தேங்காப்பார ரொம்ப நல்லா இருந்துச்சி இந்தவாட்டியும் அம்மாகிட்ட சொல்லி செய்யசொல்லு!! என இஸ்லாமிய நண்பனுக்கு பிடித்த பட்சணங்கள் ஹிந்து வீட்டில் செய்த சம்பவங்களும் உண்டு .



நட்பிற்குள் மதம் நுழையுமா ?

நல்ல உறுதியான,புரிந்துணர்வு கொண்ட எந்த ஒரு நட்பிற்குள்ளும் மதம் நுழைய முடியாது! எனக்கு பல இஸ்லாமிய நண்பர்கள் இருந்தாலும் அதில் மிக முக்கியமான மிக நெருங்கிய நண்பன் இருக்கிறான் அவன் பெயர் இப்ராம்ஷா. இப்போது துபாயில் இருக்கிறான். என் எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கெடுத்தவன் முக்கிய நேரங்களில் இடுக்கண் களைந்தவன்.


ஒரு சமயம் ஒரு நண்பனின் கட்டாய அழைப்பின் பேரில் ஒரு கூட்டத்திற்கு சென்றேன் அது ஒரு ஹிந்து மத அமைப்பின் கூட்டம். பழைய வரலாறுகள் பேசப்பட்டன, மன்னர்கால சம்பவங்கள் எடுத்துகூற பட்டன.முஸ்லிம்களுக்கு எதிரான பல விஷயங்கள் முன்வைக்க பட்டன. இதுபோன்ற சம்பவங்களை மூளைசலவை என்று சொல்கிறார்கள்.சலவை என்றால் சுத்தம் செய்வதுதானே ஆனால் இவர்கள் மூளையை அழுக்காக அல்லவா ஆக்குகிறார்கள்.



இவர்கள் சொல்லிய எந்த கருத்தும் என் இப்ராம்ஷா முன்னர் எடுபடவில்லை என் மூளையை அழுக்கடையாமல் சுத்தமாக சலவை செய்தது என் இப்ராம்ஷா வின் நட்புதான். இப்ராம்ஷா பற்றி இங்கு எழுதவே எனக்கு பெருமையாக இருக்கிறது.



இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் ஊருக்கு சென்று இருந்தேன் குடும்பத்துடன் .துபாயில் இருந்து இப்ராம்ஷாவும் வந்து இருந்தான்.எல்லோரும் குடும்பத்துடன் உற்சாகமாய் பேசி கொண்டுஇருந்தோம்.அப்போது பிரபல தொலைகாட்சியில் ஒரு செய்தி குண்டு வெடிப்பு பற்றி குண்டு வைத்தவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று செய்தி படிக்கிறார்கள்.இப்ராம்ஷா மனம் நொந்து போகிறான் வெளியில் காட்டி கொள்ளவில்லை.அவன் உற்சாகம் மறைந்து கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுகிறான்.



எங்கோ யாரோ செய்கிற தவறிற்கு ஏன் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் என சொல்லவேண்டும். இதோ என் கண்முன்னே என் நண்பன் நொந்து போகிறான்!
இதே போல நல்ல நட்பு ஏதும் இல்லாத ஒரு தவறும் செய்யாத ஒரு இஸ்லாமியர் இதை பார்க்கும்போது அவருக்கு என்ன தோன்றும் இந்துக்கள் மேல் வெறுப்பும் தன்மதத்தின் பற்றும் அதிகரிக்காதா? சும்மா இருக்கும் ஒருவனை மதவாதியாக மாற்றுவதுயார்?

இந்தியா ஒரு மத சார்பு அற்ற நாடுதானே இப்படி ஹிந்து தீவிரவாதி,முஸ்லிம் தீவிரவாதி,கிறித்தவ தீவிரவாதி என்று சொன்னால் சராசரி மக்களும் மதவாதி ஆகிவிடமாட்டார்களா? அந்த வார்த்தை இந்திய இறையான்மையை பாதிக்காதா ? இப்போது ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாய நபர் ஒருவரை யாராவது அவர் ஜாதியை குறிப்பிட்டு பேசினாலே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

அப்படி இருக்க! வெகு சாதாரணமாக ஒரு மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொல்லி விடுகிறார்கள். அப்படி சொல்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மதத்தை சொல்லி தீவிரவாதிகள் என்று சொன்னால் அந்த வார்த்தையை தேச விரோத சொல்லாக அறிவிக்க வேண்டும்.

நான் ஒரு ஹிந்து! இதில் எந்த மாற்றமும் இல்லை! என் நண்பன் இப்ராம்ஷா ஒருமுஸ்லிம்! அதிலும் எந்த மாற்றமும் இல்லை! நாங்கள் யார்? இந்த பிறவியின்மிக சிறந்த நண்பர்கள் நாங்கள் அதிலும் எந்தவித மாற்றமும் இல்லை!!!


.............................................................................................................................

...................................................................
>