இறைவனின் குழந்தைகள்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு செல்லும் சந்தர்ப்பம் அமைந்தது.நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு வேளைக்கான மதிய உணவு செய்து கொண்டு சென்றோம். சென்னை ஆவடியை அடுத்த வீரா புரம் என்ற இடத்திற்கு அருகில் இருந்தது அந்த இல்லம்.அங்கு எட்டு மாத குழந்தை முதல் பத்து,பன்னிரண்டு வயதுடைய குழந்தைகள் சுமார் நாற்பது க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.


அங்கு சென்ற போது எனக்கு தோன்றிய உணர்வு இதுதான்! அந்த அந்த குழந்தைகள் மிக சகஜமாக சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர்.அவர்கள் பாவ பட்டவர்களாகவோ? பரிதாபத்திற்கு உரியவர்களாகவோ? எனக்கு இம்மியளவும் தோன்றவில்லை! ஏன் என்றால்? நான் என்னை பல சமயங்களில் ஒரு அனாதையாக உணர்ந்து இருக்கின்றேன். எந்த ஒரு மனிதனும் எதாவது ஒரு சமயத்தில் நிச்சயமாக தன்னை ஒரு அனாதையாக விடப்பட்டு விட்டதாக கருதுவான் என்பது என் நம்பிக்கை. எவ்வளவுதான் சொந்த பந்தங்கள் இருந்தாலும் ஒரு மனிதனுக்கு வறுமை காரணமாகவோ,கடன் தொல்லை காரணமாகவோ,தொழில்
அமையாமல் இருப்பதாலோ ஏதேனும் ஒரு சமயம் அவன் தன்னை எல்லோரும் நட்டாற்றில் தவிக்க விட்டதுபோல ஒரு அனாதையாக கண்டிப்பாய் உணர்வான்.

சும்மாவா பாடினார் கவியரசர்!

அண்ணன் என்னடா! தம்பி என்னடா!
அவசரமான உலகத்திலே!! என்று ?

இந்த இல்லத்தில் இருப்பவர்களை பார்த்து தோன்றியது இதுதான்!

நம்மைபோல்தான் இவர்களும்!
இவர்களைபோல்தான் நாமும்!


மேலும், இதுபோன்ற இல்லங்களில் இருப்பவர்களுக்கு நல்ல கல்வியினை வழங்குகிறார்கள்.அதோடு நம் மக்கள் இந்த ல்லங்களுக்கு நன்கொடை வழங்குவதிலும் சிறந்து விளங்குகிறார்கள்.மக்களின் இந்த செயலும் நம்பிக்கை அளிக்கிறது.ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அடிக்கடி சென்று உதவும் நண்பர்கள் தாங்கள் செல்லும் போது புதிதாக ஒருவரை கூட அழைத்து செல்வதே அந்த இல்லங்களுக்கு அவர்கள் செய்யும் உதவியாக அமையும்.
இந்த இல்லங்களுக்கு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் வழங்குவது பற்றி ராம லட்சுமி அம்மா அவர்கள் பதிவு எழுதி உள்ளார்கள்.அதில் அவர் சொல்லி இருக்கும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை.

நாங்கள் சென்ற இல்லத்தில் கொண்டு சென்ற உணவை அவர்களிடமே கொடுத்துவிட்டோம் எந்த குழந்தை எவ்வளவு சாப்பிடும் என்று தெரிந்து மிக சரியாக பரிமாறினார்கள் குழந்தைகளும் வெகு நேர்த்தியாக ஒரு பருக்கை கூட வீணடிக்காமல் சாப்பிட்டார்கள். னால்? உணவு பொருட்களை கொண்டுவரும் சிலர் குழந்தைகளுக்கு தாங்களே பரிமாறுவதாக சொல்லி மிக அதிக அளவு உணவை கொடுத்து விடுவதாகவும் அதனால் குழந்தைகள் சிலர் வாந்தி எடுப்பதும்,மறுநாட்களில் பேதி ஆவது போன்ற இன்னல்களுக்கு ஆளாவதாகவும் மேலும் சிலர் இனிப்பு பொருட்கள் ஐஸ் க்ரீம் பொருட்களையும் வழங்குவதாக அந்த இல்லத்தின் நிர்வாகிகள் கூறினார்கள்.

இதுபோன்ற நன்கொடையாளர்களை நம்பித்தான் நாங்கள் இந்த இல்லம் நடத்துகிறோம் அதனால் வருகின்றவர்களிடம் கடுமையாக எதையும் சொல்ல முடியவில்லை என்று வருத்தத்துடன் சொன்னார்கள்.


இதுபோன்ற இல்லங்களுக்கு பொருட்களையோ உணவு வகைகளையோ வழங்கும் நன்கொடையாளர்கள் அவர்களுக்கு என்ன தேவை என கேட்டு வழங்குவது நல்லது.அதோடு கொண்டு செல்லும் உணவு பொருட்களை அவர்களிடமே கொடுத்து பரிமாற சொல்வது நல்லது.

அந்த நிர்வாகத்தினர் சில விசயங்களை சொன்னார்கள் சிலர் தங்கள் திருமண நாள்,பிறந்த நாள் போன்ற தினங்களில் இங்கு தங்கள் குடும்பத்துடன் வந்து உணவு வழங்கி ஒருநாள் பகல் இருந்து செல்வர்கள் என சொன்னார்கள்.

இந்த விசயத்தில் தான் எனக்கு ஒரு நெருடல் ஏற்பட்டது!!

இங்கே குழந்தைகள் எட்டு மாதம் முதல் பத்து வயது வரை உள்ளவர்கள் உள்ளார்கள்.ஐந்து வயதுக்குட்பட்ட பெரும்பாலும் தாய்க்கு ஏங்கும் பிள்ளைகளாக இருப்பார்கள்.சிலர் தங்கள் பிள்ளைகளையும் இது போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லும்போது, அங்கு இருக்கும் பிள்ளைகள் அந்த பெற்றோருடன் வரும் பிள்ளைகளை பார்த்து தனக்கு பெற்றோர் இல்லையே என்ற ஒரு ஏக்கத்தில் தவித்து போய் விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது .




அதோடு அங்கு செல்லும் பெண்கள் அவர்களுக்கே உரித்தான தாய்மை உணர்வில் அங்கு இருக்கும் பிள்ளைகளிடம் மிகுந்த பரிவோடும்,கனிவோடும் நடந்து கொள்ளுவார்கள் அந்த பரிவிலும்,கனிவிலும் அந்த குழந்தைகள் அந்த தாயின் தாய்மை மிகுந்த அன்பில் வசப்பட்டு தாய்காகவும் தாய் பாசத்திற்காகவும் ஏங்க ஆரம்பித்து விடுமோ என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது.

குடும்பத்துடன் அங்கு செல்ல வேண்டும் என்று ஆரம்பத்தில் எனக்கு இருந்த எண்ணத்தை அந்த குழந்தைகளை பார்த்து மாற்றி கொண்டேன்.

..............................................................................................................................

>

27 comments:

யட்சன்... said...

நெகிழ்ச்சியின் நீட்சியாய் இந்த பதிவினை எழுதியிருப்பீர்கள் என நம்புகிறேன்....

இம்மாதிரியான இல்லங்களி செயல்பாடுகள் நடுநிலையான ஒரு குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதும், தர நிர்ணயம் செய்யப்படுவதும் அது குறித்த தகவல்களை ஊடகங்களில் வெளிக்காட்டுவதும், மேலதிக நன்கொடையாளர்களை ஆர்வப்படுத்தும்.

குழந்தைகளை அழைத்துச்செல்வதில் எனக்கும் பெரிதான உடன்பாடு இருந்ததில்லை...ஆனால் அவர்களுக்கு சமூகத்தின் இத்தகைய கூறுகள் மீதான தகவல்களை கொண்டு சேர்த்திடுதல் அவசியம்.

harveena said...

நினைகையில் கண்ணீர்....

harveena said...

எவ்வளவுதான் சொந்த பந்தங்கள் இருந்தாலும் ஒரு மனிதனுக்கு வறுமை காரணமாகவோ,கடன் தொல்லை காரணமாகவோ,தொழில்
அமையாமல் இருப்பதாலோ ஏதேனும் ஒரு சமயம் அவன் தன்னை எல்லோரும் நட்டாற்றில் தவிக்க விட்டதுபோல ஒரு அனாதையாக கண்டிப்பாய் உணர்வான்.

உருக்கமான பதிவு ,,,, உண்மையான வாக்கியம்

நட்புடன் ஜமால் said...

\\நான் என்னை பல சமயங்களில் ஒரு அனாதையாக உணர்ந்து இருக்கின்றேன். எந்த ஒரு மனிதனும் எதாவது ஒரு சமயத்தில் நிச்சயமாக தன்னை ஒரு அனாதையாக விடப்பட்டு விட்டதாக கருதுவான் என்பது என் நம்பிக்கை.\\

நல்லா சொல்லியிருக்கீங்க அண்ணா

Poornima Saravana kumar said...

தெளிவான வார்த்தைகளில் தங்கள் எண்ணத்தை பரிமாறியிருக்கிறீர்கள் அண்ணா.

//அதோடு அங்கு செல்லும் பெண்கள் அவர்களுக்கே உரித்தான தாய்மை உணர்வில் அங்கு இருக்கும் பிள்ளைகளிடம் மிகுந்த பரிவோடும்,கனிவோடும் நடந்து கொள்ளுவார்கள் அந்த பரிவிலும்,கனிவிலும் அந்த குழந்தைகள் அந்த தாயின் தாய்மை மிகுந்த அன்பில் வசப்பட்டு தாய்காகவும் தாய் பாசத்திற்காகவும் ஏங்க ஆரம்பித்து விடுமோ என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. //

உண்மை தான்!

RAMYA said...

ஜீவன் அருமையான பதிவு,

இறைவனின் குழந்தைகள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் யாருமில்லாதவர்கள் என்ற எண்ணம் இருக்கின்றதே, அந்த எண்ணம் மனதில் ஒரு ஓரத்தில் ஆழப் பதிந்திருக்கும்.

அந்த எண்ணத்தை அழிக்க யாரால் முடியும்??

விவரம் தெரியாத வரையில் தான் ஓட்டம் ஆட்டம் எல்லாம், என்று விவரம் தெரிகின்றதோ அன்று எல்லாமே சூனியம் ஆகிவிடுகிறது.

அதிலும் சிலருக்கு வளர்ப்பு தாய் தந்தை கிடைத்து விடுவார்கள்.

இதே போல் எல்லா குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று நான் மனதார வேண்டுவேன் அதே இறைவனிடம்.

சிறு வயதில் அன்பாகவும், பரிவாகவும் கவனிக்க தாய்.

கல்வியையும் அன்பையும் சேர்ந்து தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் தந்தை.

ஓடி ஆடி விளையாட சகோதரர்கள் இவர்கள் யாருமே இல்லை என்ற உணர்வு இருக்கிறது பாருங்கள், அது மிகவும் கொடுமை.

இது போல் இல்லாததால் வளர்ந்து வரும் குழந்தைகளின் ஏக்கங்கள் இருக்கிறதே, அதை வார்த்தைகளினால் சொல்ல முடியாது.

அவர்களை காண செல்லும்போது அவர்கள் காட்டும் ஆர்வம், அந்த கண்களில் காணும் மகிழ்ச்சி, எப்படி விவரிக்க முடியும்?? முடியவே முடியாது.

ஜீவன் சொல்லி இருப்பது நூற்றிற்கு ஐந்நூறு சதவிகிதம் உண்மை. அன்பு மிகுதியால் நாம் கொடுக்கும் உணவு, அந்த குழந்தைகளுக்கு ஒத்துக் கொளவதில்லைதான்.

ஜீவன் கூறி இருப்பது போலவே உணவு விஷயத்தில் நிர்வாகத்திடமே விட்டு விடுவது சாலச் சிறந்தது.

ஆனால் எவ்வளவோ செலவு செய்கின்றோம். நம்மால் முடிந்த நேரத்தில், முடிந்த பொருட்களை இந்த செல்வங்களுக்கு வாங்கிக் கொண்டு சென்று கொடுத்து விட்டு, ஒருநாள் முழுவதும் அவர்களுடன் கழிக்கும் சுகம் வேறு எதிலும் வராது ஜீவன்,

அந்த அருமையான உணர்வை நானும் அனுபவித்திருக்கின்றேன்.

நல்ல ஒரு பதிவு.

குழந்தைகள் மட்டும் அல்ல ஜீவன் முதியவர்களுடனும் சில மணி நேரம் கழிக்கலாம். அவர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். மிகவும் வாஞ்சையாக நம் தலை தடவி, அன்புடனும், பாசத்துடனும் பேசுவார்கள். அதிலும் அவர்கள் பேசுவதை நாம் அக்கறையுடன் கேட்பதை அவர்கள் உணர்ந்த அடுத்த நிமிடம் அப்படியே நெகிழ்ந்து விடுகிறார்கள்.

வயதான பெற்றோர்கள் நம்மை அவர்களின் குழந்தைகள் போலவே பாவித்து நலம் விசாரிப்பார்கள். நான் அந்த அன்பை மிகவும் ரசிப்பேன். அவர்களுடன் நெடு நேரம் பேசிக் கொண்டிருப்போம். அவர்களை சிரிக்க வைப்பேன். சில உலக நடப்பைக் கூறி சிந்திக்கவும் வைப்பேன். அவர்களுக்கும் சில மணி நேரம் போவது தெரியாமல் பார்த்துக் கொள்வதில் மிகவும் ஜாக்கிரதை உணர்வோடு இருப்பேன்.

இவர்களைப் பற்றி கூறவேண்டுமானால் உங்களுடன் சேர்ந்து நானும் ஒரு பதிவு போட வேண்டும் போல் உள்ளதே.

நன்றி ஜீவன் !!

அப்துல்மாலிக் said...

நல்ல பதிவு ஜீவா சார்

தொடர்ந்து பதியுங்கள்

sakthi said...

அன்புள்ள ஜீவன்,
உங்கள் மன நெகிழ்வை உணருகிறேன் .உலகில் பிறந்த யாரும் அனாதைகள் இல்லை , அவர்களுக்கு தாய்,தந்தை ,இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்களை போன்ற ,என்னை போன்ற நல்ல சகோதர ,சகோதரிகளை , இறைவன் கொடுத்துள்ளான் .அவர்களுக்கு நாம் நல்ல தாயாய்,தந்தையாய் ,சகோதரர்களாய் இருப்போம் .நம் வருமானத்தில் அவர்களுக்காக சிறு தொகையை சேமிக்கலாம் .
ஜெய் ஹிந்து

sakthi said...

அன்புள்ள ஜீவன்,
உங்கள் மன நெகிழ்வை உணருகிறேன் .உலகில் பிறந்த யாரும் அனாதைகள் இல்லை , அவர்களுக்கு தாய்,தந்தை ,இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்களை போன்ற ,என்னை போன்ற நல்ல சகோதர ,சகோதரிகளை , இறைவன் கொடுத்துள்ளான் .அவர்களுக்கு நாம் நல்ல தாயாய்,தந்தையாய் ,சகோதரர்களாய் இருப்போம் .நம் வருமானத்தில் அவர்களுக்காக சிறு தொகையை சேமிக்கலாம் .
ஜெய் ஹிந்து

பாலராஜன்கீதா said...

//சிலர் தங்கள் பிள்ளைகளையும் இது போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லும்போது, அங்கு இருக்கும் பிள்ளைகள் அந்த பெற்றோருடன் வரும் பிள்ளைகளை பார்த்து தனக்கு பெற்றோர் இல்லையே என்ற ஒரு ஏக்கத்தில் தவித்து போய் விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது//
இதே எண்ணத்தினால்தான் உதவும் கரங்கள் இல்லங்களுக்குச் செல்லும் போதெல்லாம் நானும் என் இல்லத்தரசி மட்டும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

Vidhya Chandrasekaran said...

\\குடும்பத்துடன் அங்கு செல்ல வேண்டும் என்று ஆரம்பத்தில் எனக்கு இருந்த எண்ணத்தை அந்த குழந்தைகளை பார்த்து மாற்றி கொண்டேன்.\\

நான் இந்த கோணத்தில் யோசிக்கவேயில்லை. நானும் உங்களின் முடிவை பின்பற்ற முயற்சிக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

ஜீவன் என் பதிவின் பின்னூட்டத்தில் சொன்னவாறே தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து இன்னும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ளச் செய்திருக்கிறீர்கள். என் பாராட்டுக்கள்.

இனிப்புகள் வழங்குவது மட்டுமே ஆரோக்கியத்துக் கேடு என்பதில்லை, யார் யார் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்பதை அறியாமல், எதையும் வீணாக்காது சாப்பிட வேண்டும் எனப் பழக்கப் படுத்தப் பட்ட அக்குழந்தைகளுக்கு நாம் பரிமாறுவதும் சரியல்ல என்பதையும் புரிய வைத்துள்ளீர்கள்.

அது போல குடும்பத்துடன் செல்வது அவர்களுக்கு ஏக்கத்தைக் கொடுக்கக் கூடும் என்பதுவும் யோசிக்க வேண்டிய விஷயம்தான் ஜீவன்.

பகிர்ந்தலுக்கு மிக்க நன்றி.

அ.மு.செய்யது said...

மிக‌வும் உருக்க‌மான‌ ப‌திவு ஜீவ‌ன்..

தேவன் மாயம் said...

\நான் என்னை பல சமயங்களில் ஒரு அனாதையாக உணர்ந்து இருக்கின்றேன். எந்த ஒரு மனிதனும் எதாவது ஒரு சமயத்தில் நிச்சயமாக தன்னை ஒரு அனாதையாக விடப்பட்டு விட்டதாக கருதுவான் என்பது என் நம்பிக்கை.\///

அந்த நேரத்தில் ஆறுதல் கிடைப்பது அவசியம். உருக்கமான பதிவு.

Rajeswari said...

நெகிழ்வான விடயம்..

//குடும்பத்துடன் அங்கு செல்ல வேண்டும் என்று ஆரம்பத்தில் எனக்கு இருந்த எண்ணத்தை அந்த குழந்தைகளை பார்த்து மாற்றி கொண்டேன்//.

நானும் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

அமுதா said...

ஜீவன், எனது எண்ணங்களை எழுதினாற் போலிருந்தது இப்பதிவு.

/*சிலர் தங்கள் பிள்ளைகளையும் இது போன்ற இடங்களுக்கு அழைத்து செல்லும்போது, அங்கு இருக்கும் பிள்ளைகள் அந்த பெற்றோருடன் வரும் பிள்ளைகளை பார்த்து தனக்கு பெற்றோர் இல்லையே என்ற ஒரு ஏக்கத்தில் தவித்து போய் விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது .*/
எனது அச்சமும் இதுவே. பொதுவாக நான் தேவையானவற்றைக் கொடுத்துவிட்டு, இயலும் பொழுது தனியாகச் சென்று அக்குழந்தைகளுடன் அளவளாவ முயற்சிப்பேன். இதனால் சற்று நேரம் அவர்களுக்கு அன்பு பாராட்ட வெளியுலக மக்கள் இருக்கிறார்கள் என்றும் இருக்கும், நம் குழந்தைகளைக் கண்டு ஏக்கமும் இருக்காது. ஆனால் நம் குழந்தைகளுக்கு இது போன்ற குழந்தைகளின் நிலை பற்றி தெரிவிக்க வேண்டும்.
நல்ல பதிவு.

புதியவன் said...

மிகவும் நெகிழ்வான பதிவு ஜீவன் அண்ணா...

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த இல்லத்தில் இருப்பவர்களை பார்த்து தோன்றியது இதுதான்!

நம்மைபோல்தான் இவர்களும்!
இவர்களைபோல்தான் நாமும்! //

மறுக்க முடியாத உண்மை ஜீவன்.

அதோடு அங்கு செல்லும் பெண்கள் அவர்களுக்கே உரித்தான தாய்மை உணர்வில் அங்கு இருக்கும் பிள்ளைகளிடம் மிகுந்த பரிவோடும்,கனிவோடும் நடந்து கொள்ளுவார்கள் அந்த பரிவிலும்,கனிவிலும் அந்த குழந்தைகள் அந்த தாயின் தாய்மை மிகுந்த அன்பில் வசப்பட்டு தாய்காகவும் தாய் பாசத்திற்காகவும் ஏங்க ஆரம்பித்து விடுமோ என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. //
மிகச் சரியே.....

சரியான எண்ணக்கூற்றுகளுடன் அமைந்த நல்ல பதிவு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//குடும்பத்துடன் அங்கு செல்ல வேண்டும் என்று ஆரம்பத்தில் எனக்கு இருந்த எண்ணத்தை அந்த குழந்தைகளை பார்த்து மாற்றி கொண்டேன்.//


உதவி செய்யறதோடு நிறுத்திக்காம, நாம செய்யற அந்த உதவியால கூட அவங்க பாதிக்கப்பட்டு விடுவாங்களோ அப்படிங்கிற உங்க எண்ணத்திலும் ஒரு தாய்மை தெரிகிறது ஜீவன்.

குடந்தை அன்புமணி said...

//குடும்பத்துடன் அங்கு செல்ல வேண்டும் என்று ஆரம்பத்தில் எனக்கு இருந்த எண்ணத்தை அந்த குழந்தைகளை பார்த்து மாற்றி கொண்டேன்.//

தங்களின் எண்ணம் புரிகிறது. எனது மகளின் பிறந்தநாளுக்குகூட நான் மட்டுமே இல்லத்திற்கு சென்றுவந்தேன்.

SK said...

அண்ணா, அருமையான பகிர்தல்.

அந்த இல்லத்தின் முகவரி அனுப்ப முடியுமா மெயிலில்.

ராமலக்ஷ்மி said...

உங்கள் பதிவிற்கான லிங்கையும் என் பதிவிலே சேர்த்து விட்டேன் ஜீவன். ரம்யா பதிவிடுகையில் அதையும் நம் பதிவில் இணைத்து வைப்போம். நன்றி.

தமிழ் அமுதன் said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!!

butterfly Surya said...

நல்ல பதிவு நண்பரே. யதார்த்தமான வார்தைகள்.

இந்த பதிவு விகடன்.காம் பகுதியில் வந்துள்ளது.

வாழ்த்துகள்.

ஹேமா said...

ஜீவன்,மனதைத் தொடும் பதிவு.ஆண்டவனின் படைப்பில் ஏன் ஏற்ற இறக்கம் என்று சில சமயங்களில் நினைக்க வைக்கும் சம்பவங்களில் இதுவும் ஒன்று.

CHANDRA said...

ஆண்டவனின் விளையாட்டுக்கு அகப்பட்ட “இறைவனின் குழந்தைகள்”.நெகிழ்ச்சியான பதிவு, அடுத்தவர் மன வேதனை குறித்து ஆராயும் உங்கள் மனித நேயம் போற்றுதலுக்குறியது.

ராம்மோகன் said...

”மகிழ்ச்சி வெள்ளம், குதூகலக் குற்றாலம்னெல்லாம் நம்ம உற்சாகத்தைப் பகிர்ந்துக்க என்னென்னவோ எழுதுவோம், பேசுவோம். ஆனா, பிறந்ததில் இருந்து சந்தோஷத்தோட சாரல்கூட படாதவங்களைப் பத்தி எப்பவாவது யோசிச்சிருக்கோமா?”

”வாழ்க்கையில் சந்தோஷ மழைக்காக ஏங்கிக்கிடப்பவர்களுக்கு எங்களோட சின்ன உதவி தான் சாரல்...

சாரலில் இணையுங்கள்...

மேலும் விவரங்களுக்கு....

http://rammohan1985.wordpress.com/2008/11/26/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%af%e0%ae%be/